தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்!
ஜான் கணேஷின் அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[1]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸ் ஜான் கணேஷை சந்தித்தது[2]: அந்த ஒருவர் தான் ஜே. மரிய தாஸ் ஆவர். 1971-1976 காலத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மடாலத்தில் ஜே. மரியா தாஸ் என்ற பாதிரி இருந்துள்ளார். “உள்கலாச்சாரமயமாக்கல்” மற்றும் கிறிஸ்தத் தொன்மையினை நிலைநாட்டுவதற்கு ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இவருக்கும் ஏதோ தொடர்பு இருந்தது தெரிகிறது. திருச்சியில் மைக்கேல் என்ற பாதிரி “தமிழ் இலக்கியக் கழகம்” என்ரு ஒன்றை வைத்துக் கொண்டு அத்தகைய ஆராய்ச்சியை செய்து வந்தார். இவர் தாம், ஜான் கணேஷை மரிய தாஸுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு தெரிந்தவராகவும் இருந்தார். இந்நிலையில் தான், ஜான் கணேஷின் திறமையைக் கண்டு, அவர் தமது வேலைக்கு உதவக்கூடும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், ஜான் கணேஷுடன் பேசிப்பார்த்ததில், அவர் ஒரு விசுசாசியாகவும், பைபிள் ஞானத்தில் தலைசிறந்தும் விளங்குவதை கண்டு கொண்டார். அவரைப் பற்றி ஆர்ச் பிஷப் அருளப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.
ஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கி ஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போது பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் இருவரும் அனைத்துலக ரீதியில் பெரும் புகழைப் பெறலாம், அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.
ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அருளப்பாவின் திட்டம்: கணேஷ் ஐயருக்கு இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நன்றாகவே தெரியும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் தாமஸ் இந்தியாவுக்கு வந்த 1950வது தினம் என்று கொண்டாடினார்கள். அதில் அப்பொழுதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். “உண்மையிலேயே தாமஸ் இந்தியாவுக்கு வந்தது மெய்யா?”, என்று அவர் கேட்ட போது, அருகில் இருந்த எந்த ஆர்ச் பிஷப்போ, பாதிரியோ வாயைத்திறக்கவில்லை. புன்னகைத்து, நேருவின் கவனத்தைத் திருப்ப முயன்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இவ்விசயங்களை அருளப்பாவிடம் சொன்னபோது, அருளப்பா சொன்னார், “அவ்வாறு ஆதாரங்கள் இல்லையென்றால், ஆதாரங்களை நாம் உண்டாக்க வேண்டும். ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும்”. கணேஷ் ஐயர், “அத்தகைய வேலையை நான் விரும்பவில்லை, ஆனால், அப்பொழுது எனக்கு பணம் தேவையாக இருந்தது, அதனால், அத்தகைய கள்ள ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைக்கு ஒப்புக்கொண்டேன்”, என்கிறார். அவ்வாறே கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. “சாந்தி ஆஸ்ரமம்” என்றும் அவருடைய மேற்பார்வையில் கட்டப்பட்டது.
1960களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம்[3] என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம்[4]. அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.
1970களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:
ஆண்டு | குறும்புத்தகத் தலைப்பு | ஆசிரியர் | முன்னுரை / முகவுரை வழங்கியோர் | அணிந்துரை / பாராட்டுரை |
1970 | ஐந்தவித்தான் யார்? | எம். தெய்வநாகம் | கா. அப்பாதுரை | பொன்னு ஆ. சத்தியசாட்சி |
1971 | வான் எது? | எம். தெய்வநாகம் | ||
1971 | நீத்தார் யார்? | எம். தெய்வநாகம் | ||
1972 | சான்றோர் யார்? | எம். தெய்வநாகம் | ||
1972 | எழுபிறப்பு | எம். தெய்வநாகம் | ||
1973 | அருட்செல்வம் யாது? | எம். தெய்வநாகம் | ||
1973 | மூவர் யார்? | எம். தெய்வநாகம் | ||
1974 | மனித இன ஒருமைப்பாடு | ஆர். அருளப்பா | ||
1974 | சான்றாமை | ஆர். அருளப்பா | ||
1974 | Tirukkural A Christian Book? | ஆர். அருளப்பா | ஆர். அருளப்பா | வி. டி. தேவசகாயம் |
1975 | பேரின்ப விளக்கம் | ஆர். அருளப்பா மற்றும் எம். தெய்வநாகம் | ||
1976 | God The Bridegroom | ஆர். அருளப்பா | ||
1976 | God in Thirukkural | ஆர். அருளப்பா | ச. வே. சுப்ரமணியன் | வீ. ஞானசிகாமணி |
இவ்வாறு முன்னரே தீர்மானம் செய்து போலி ஆராய்ச்சி நடத்தி, ஒருவருக்கு ஒருவர் பாராட்டுத் தெரிவித்து, தொடர்ந்து செயல்பட்டதை சுலபமாக யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.
© வேதபிரகாஷ்
16-10-2015
[1] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.
[2] https://vaticanculturation.wordpress.com/tag/relic-manufacturing/
[3] மெய்ப்பொருள் அச்சகம், 5, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 600 023.
[4] வீ. ஞானசிகாமணி கூறுகிறார், “என் நினைவு சரியாக இருக்குமானால் அகத்தியர் ஞானம் என்னும் சிறு நூல், 16 பக்கங்களுடையதாய் 1969-ல் எனக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர் டேவிட் சாலமோன் எம்.பி.பி.எஸ்., இதனை என்னிடம் கொடுத்தார்”. முன்னுரை, அகத்தியர் ஞானம் [விளக்கவுரை], “ஞானோதயம்”, 66/7, அசோசியேசன் சாலை, சென்னை – 600 050.